Monday, August 20, 2007








"துவம்சம்" அல்லது நினைவறா நாள்.
( 15-05-1985 )



குமுதினி .........
இந்தப் பெயரை,
உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட
துக்கத்தால் ஒரு கணம்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!!


காகம் கத்தித் துயிலெழும் - என்
இனிய தீவினை ........
பட்டணத்தோடு இணைத்த
பாலம் அவள்!

அவள் மடிமீது ஏறிய பின்புதான்,
எங்களின் பனாட்டும், பாயும்.......
ஓலையும், ஒடியலும் .........
பண நோட்டுக்களாக மாறின !!

பிரபஞ்ச உருண்டைக்குள் தான்,
எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும்
அந்தப் பாவைமீது காலை வைத்த - பின்புதான்
நாம் கண்டுணர முடிந்தது !!!

ஆயிரம் பேதம் சொல்லி,
பனம்கிழங்குக் கூறுகளாய்........
கிழிபட்டுக் கிடந்த என் மக்களை
"மனிதமே, நேயமென்று"
தன் மடிமீது சுமந்து ......
பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய
புண்ணியவதி அவள் !

பலனை எதிர்பாராமல்,
கடமையை மட்டும் செய்த
கீதை படிக்காத கோதை !

என் கையில் சுமந்த புத்தகங்கள் .....
காலில் நசிபடும் செருப்பு ........
தீபாவளிப் புத்தாடை .....
பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை .......
அப்புவையும்,ஆச்சியையும்,
கிடத்திவைத்த சவப்பெட்டிகள் .......
எல்லாமே ...... எல்லாமே ..........
அவள் சுமந்தவை !

கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும்
கல்தாக் கொடுத்துவிட்டுக்
கடும் வேகக் கப்பலாய் - என்
துறைமுகத்தில் மிதந்த அழகுராணி !

புள்ளிமானாய் துள்ளிக் குதித்து - அவள்
ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது .......
மலைபோல் உயரும் அலைகளும் - அவளிடம்
கைகட்டிப் பணிந்து,
மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !!

அதிகாலையின் பனிச்சிதறலோடு ......
அன்றும் அவள் - தன் அரும்புத்திரர்களோடு
புறப்பட்டுப் போனாள் !!

பிரளயம் என்பதை அறியா - அவளையே
பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !!

வெடித்து வீசியெறிந்த பட்டாசுத்
துண்டுகளாய் ..........
காலறுபட்டு ........கையறுபட்டு ........
துடிக்கத் துடிக்க .........
அவ்ள் மடியில் உயிர் போன,
என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி .......
இன்னமும் ....... அவர்கள் ........
வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி .......
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே ........
சிதையில் எரிந்த என் நண்பனின்,
மனைவி பற்றி ........

பதைக்கப்,பதைக்க
கொலையுண்டு கிடந்த
பச்சை மழலை பற்றி .....

மரணிக்கும் போதும்,
எதிரியிடம் மண்டியிடாது
உயிர் விட்ட என்னூர்- வீர
அன்னைகள் பற்றி ......
என்னினிய உணர்வில்
தமிழைக் கலந்து,
தன்னுயிரைக் கூலிப்படைக்கு
காவு கொடுத்திட்ட
தமிழாசிரியன் பற்றி .......
எவரைப்பற்றி .......
எவரைப்பற்றி ........
நான் புலம்பி அழ ?????

வெல்லை, பெருந்துறை .......
குடவிலி, குவிந்தா .......
எத்திசை நோக்கினும்
எங்கும் அழுகுரல் !!

கீழ்த்திசையிருந்து ........
பெருந்துறையீறாய்.........
ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.

என்னூர்க் கொண்டைச் சேவலும்,
காக்கையும், கூட மார்பில்
அடித்த மரண நாளது !!

வீகாமனும்,வெடியரசனும்,
ஆண்ட திருத்தீவு
விம்மல்களால் நிறைந்த நாளது !

பூதத்தைக் கொண்டு பொழிந்த - கிணறுகளில்
நன்னமுத நன்னீர் குடித்த - மனிதர்களின்
கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .

இந்து மாக்கன்னியின்,
பொட்டெனப் போற்றிடும் .......
நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி - கேவலம்
காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ??

ஈழதேசத்து மூளையாய்த் திகழும் - அழகிய
தமிழின் இலக்கணத்தீவு ........
அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???


கூவியெழும் அலைகளின் கூக்குரல் - இக்
காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.
மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !!
மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.


ஆழ்கடலிருந்து .....
அலைகடலின் மடியிருந்து ......
வெட்டத் தளைக்கும் மரங்களாய் .....-நீங்கள்
விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!!

"மா.சித்திவினாயகம்"

("மாவிலி" மலரிலிருந்து )


நிலாந்தனின் கடலம்மா !!!!!!!

நிலாந்தன்!

கடலம்மா...கடலம்மா... நீயே சொல்
குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?-எம்மவரின்
அவலங்களைச் சடலங்களாய்ச் சுமந்துகொண்டு
குமுதினி குருதி வடிய வந்தாள்......
 
கடலம்மா கண்டாயோ?
கார்த்திகேசு என்னவானான்?
எந்தக் கரையில் உடலூதிக் கிடந்தானோ?

ஓ... சோழகக் காற்றே....
நீ,வழம்மாறி வீசியிருந்தால்...
"குமுதினிவரமாட்டாள்" என்று
நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய்.
பாவம்.......
மரணங்களின் செய்தி கூடக்கிட்டாத
தொலைதீவில்,
ஏக்கங்களையும் துக்கங்களையும்
கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்காத்திருக்கும் மக்கள்...

கடலம்மா..... நீ மலடியடி ......
ஏனந்தத் தீவுகளைஅனாதரவாய்த் தனியே விட்டாய்?

கடலம்மா...
உன் நீள் பரப்பில்அனாதரவாய் மரணித்த
எம்மவரை புதிய கல்லறைகளை எழுப்பி
அனாதைக் கல்லறைகள் என நினைவூட்டு.
ஆனால்....,இனிவருங் கல்லறைகள்
வெறும்இழப்புக்களின் நினைவல்ல,
எமதுஇலட்சியங்களின் நினைவாகட்டும்!
(1985 / அலை-26)


வ.ஜ.ச.ஜெயபாலன்

இரத்தம் எழுதிய கவிதை
வ. ஐ. ச. ஜெயபாலன்

மே பதினைந்தில்
இந்துமா கடலில்
வானம் அதிர ஓலமிட்டது
புயல் தீண்டிய கருங்கடலல்ல.
என்னரும் தீவின் மக்கள் அறிவீர்!
அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது
மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய
தோரணங்களும் கொடிகளுமல்ல.
உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி!

கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில்
கட்த்துக் கிடந்த நாவுகள் தோறும்
இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன்.
போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என்
மூதாதையரின் கிராமியப் பாடலில்
முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன்.

கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல
வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில்
தலைவிரித்தடின கறுத்த பனைகள்.
நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம்
காட்டுக் குதிரைகள் கனைத்தன.
உப்புக் கழிகளில்
புலம் பெயர்ந்துறையும்
சர்வதேசப் பறவைகள் அரற்றின.

பருத்தித் தோட்ட வெளிகளை எரித்து
குதிரைகளுக்காய்ப் புல்வெளி விரித்த
டச்சுக் கொடுங்கோல் அஞ்ச எழுந்த என்
முன்னோர் இசைத்த போர்ப்பாடல்களை
அன்று மீண்டுமென் கரைகளிற் கேட்டேன்.

மௌனித்து நிற்பதேன் உலகம்?

முகமிழந்த என்னரும் மக்கள்
யம் மூதாதையரின் முகங்களைப் பெறுக!
பாண்டவர் தம்முள் பொருதிக் கிடக்கிறார்.
குருசேத்திரத்து மக்களே எழுக!
..........................


நெடுந்தீவு ஆச்சிக்கு.....

அலைகளின்மீது பனைக்கரம் உயர

எப்போதும் இருக்கிற

என்னுடைய ஆச்சி

காலம் காலமாய் உன்னைப் பிடித்த

பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின

போத்துக்கீசரின் எலும்புகள் மீதும்

தென்னம் தோப்பு

நானும் என் தோழரும்

செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.


தருணங்களை யார் வென்றாலும்

அவர்களுடைய புதை குழிகளின்மேல்

காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.


என்ன இது ஆச்சி

மீண்டும் உன் கரைகளில்

நாங்கள் என்றோ விரட்டி அடித்த

போத்துக்கீசரா ?

தோல் நிறம் பற்றியும்

கண் நிறம் பற்றியும்

ஒன்றும் பேசாதே

அவர்கள் போத்துக்கீசரே


எந்த அன்னியருக்கும் நிலை இல்லை

எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர

எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு

கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர

எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.


ஆச்சி

என் இளமை நாள் பூராக

ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்

தேடிய வாழ்வெலாம்

ஆமை நான், உனது கரைகள் நீழ

புதைத்து வந்தேனே.

என்னுடன் இளநீர் திருட

தென்னையில் ஏறிய நிலவையும்

என்னுடன் நீர் விழையாட

மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும்

உனது கரைகளில் விட்டுவந்தேனே

என் சந்ததிக்காக.


திசகாட்டியையும் சுக்கானையும்

பறிகொடுத்த மாலுமி நான்

நீர்ப் பாலைகளில்

கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி


நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர

எதனைக் கொண்டுநான்

ஆற என் ஆச்சிமனம் 

நெடுந்தீவு (Delft) எனது மூதாதையரின் தீவு.விட்டு விடுதலையாகி நின்ற இந்த தனித்த தீவு இன்று இரணுவத்தின்பிடியில் சிக்கியுள்ளது
பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டது.