Saturday, May 13, 2017


குமுதினிக் கொலைகள்...   
முடிவறாத் துயரினுள்  32 ஆண்டு...  

நெடுங்கடல் இரத்த மாகி
நெருப்பென ஆன திந்;நாள்
கொடுங்கடல் வாளால் வெட்டிக்
கொன்றதும் இந்நாள் தம்பி
நடுங்கிய மக்க ளோடும்
நாறிய காட்சி யோடும்
பிடுங்கிய மனிதக் கூச்சல்
பெயர்ந்தது உலகம் எல்லாம்!

கொட்டிய இரத்தக் கூடு
கொழுத்தது இன்னும் அந்தப்
பட்டயம் பருத்த காடு
பார்க்குது குருதி யோடு!
முட்டிய சாக சங்கள்
முப்பதும் இரண்டு மாகிக்
கெட்டகா லத்தை எண்ணிக்
குளிக்கிற தின்று அம்மா!

கெட்டது கெட்டுப் போகக்
குளறிய ஓலம் போகத்
தொட்டது மனிதம் என்கத்
தோன்றுவ தினித்தான் என்ன?
நட்டமென் றொருவர்க் கில்லை
நாயகம் தமிழுக் கன்றிப்
பட்டது காயம் என்ற
பாடங்கள் எவர்க்கும் இல்லை!

குமுதினிப் படகுக் காதை
கொழுத்திடும் நெஞ்சம் பீறிச்
சமுத்திர அலையில் தோன்றுஞ்
சரித்திரம் மாற வேண்டும்!
எமைத்திரை யிட்ட தீங்கு
இடியெலாம் விலகிப் போக
குமுதினிப் படகுக் கூச்சல்
கேட்டிடாப் பொழுது வேண்டும்!

-இனமானக் கவிஞர் "தேசபாரதி" தீவகம் வே. இராசலிங்கம்.